டாஸ்மாக் மதுபானக்கடையை பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டம்
எட்டயபுரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி, அந்த கடையை பா.ஜ.கவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.
டாஸ்மாக் கடை
எட்டயபுரம் அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபானக்கடை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்து அந்த கடை இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முதல் எட்டயபுரம் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் பேரூராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபான கடை வழியாக பாரதியார் நூற்றாண்டு நினைவு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாரதியார் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு மாணவிகள் சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகும்.
பா.ஜ.க.வினர் முற்றுகை
எனவே டாஸ்மாக் மதுபான கடையை நகருக்கு வெளியே வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.கவினர் நேற்று மாலையில் ஒன்றிய பொதுச் செயலாளர் ஹரிஹரசுதன் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னாபீர்முகமது, சப்-இன்ஸ்பெக்டர் முத்துவிஜயன் உள்ளிட்ட போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பா.ஜ.கவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.