குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி...! விரைவில் டாஸ்மாக் மதுபானங்கள் விலை மேலும் உயரும்...!

முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும். அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது.

Update: 2022-10-20 06:32 GMT

சென்னை:

தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ஆயத்தீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.

2003-04-ம் ஆண்டில் ரூ.3,639.33 கோடியும், 2004-2005-ல் ரூ.4,872.03 கோடியும், 2005-06-ம் ஆண்டில் ரூ.6,030.77 கோடியும், 2006-07-ம் ஆண்டில் ரூ.7,473.61 கோடியும், 2007-08-ம் ஆண்டில் ரூ.8,821.16 கோடியும், 2008-09-ம் ஆண்டில் ரூ.10,601.50 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் ரூ.2 ஆயிரம் கோடி அதிகரித்தது. கடந்த 2019-20-ம் ஆண்டில் ரூ.33,133.24 கோடியும், 2020-21-ம் ஆண்டில் ரூ.33,811.15 கோடியும், 2021-22-ம் ஆண்டில் ரூ.36,013.14 கோடியாகவும் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

இந்த வரி வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் மதுவிலக்கு திருத்த அவசர சட்டம் நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கொண்டு வந்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள் (ஐ.எம்.எப்.எல்.) ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருட்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டு உள்ளதால் கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது.

முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும். அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்