டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை, ரெயிலடியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை ரெயில் நிலையம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மதியழகன், பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாநிலச் செயலாளர் ஜெயபால், சி.ஐ.டி.யூ. மாநில சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தஞ்ைச மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், டாஸ்மாக் துறை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி ஊழியர்களிடம் தினமும் கட்டாய வசூல் செய்யும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புரோக்கர்களின் தூண்டுதலால் விதிமுறைக்கு புறம்பாக பழிவாங்கும் நடவடிக்கையோடு ஆய்வு மேற்கொண்ட திருச்சி மண்டல பறக்கும்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு ஆதரவாக துணை போகும் தஞ்சாவூர் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் புரோக்கர்களுக்கு ஆதரவாக செயல்படும் இளநிலை உதவியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் பேர்நீதிஆழ்வார், துணைத்தலைவர் கோவிந்தராஜூ மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.