டாஸ்மாக் கடையை இடமாற்றம்
செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
உடுமலை அருகே எலையமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ஊராட்சியின் எல்லையில் அமராவதி பிரதான சாலையின் ஓரத்தில் இயங்கி வருகின்ற இந்த கடையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அந்த வழியாக செல்கின்ற பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அதைத்தொடர்ந்து கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் அதற்குண்டான நடவடிக்கை அதிகாரிகள் தரப்பில் எடுக்கவில்லை. இந்த சூழலில் நேற்று எலையமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வருகை புரிந்த அமராவதி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையில் வருவாய்த்துறையினரும் அங்கு வருகை தந்தனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது உயர் அதிகாரிகளுக்கு முறைப்படி மனு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி அமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.