டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Update: 2022-09-19 15:34 GMT


டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு ெதரிவித்து ெபாதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடை

திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அவினாசி தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி தலைவர் மயில்சாமி மற்றும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவுவாசலில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர்.

தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். பின்னர் அவர்களை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க அனுமதித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது எங்கள் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கு கட்டிட பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. இங்கு டாஸ்மாக் கடை வந்தால் மதுப்பிரியர்கள் தோட்டங்களில் அமர்ந்து மது அருந்துவதுடன் ஆடு, கோழிகளை திருடிச்செல்லும் வாய்ப்புகள் அதிகம். தோட்டங்களில் தனியாக இருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும்.

பாதிப்பு ஏற்படும்

ஆடு, மாடு மேய்க்க பெண்கள் தனியாக செல்வார்கள். அவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. ஊரில் இருக்கும் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே டாஸ்மாக் கடை புதிதாக அமைக்க உரிமம் வழங்கப்பட்டு இருந்தால் அதை ரத்து செய்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்