டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
பல்லடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
பல்லடத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
பொதுமக்கள் புகார்
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் வந்து மதுபாட்டில் வாங்கிச் செல்கின்றனர்.
இந்த நிலையில் மது வாங்க வரும் சிலர் அங்கேயே மதுஅருந்தி விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்துக்கொள்வதும், ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதனால் பெண்கள், குழந்தைகள் அந்த பகுதியில் நடமாட முடியாதநிலை உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் நேற்று அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் டாஸ்மாக் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம். ஆனந்தன் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள இந்த மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளேன். மேலும் தமிழக அரசு 500 மதுக்ககடைகளை அகற்றுவதாக அறிவித்துவிட்டு வியாபாரம் குறைவாக உள்ள மதுக்கடைகளை மட்டுமே மூடி உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள மதுக்கடைகளையும் மூட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு அண்ணாதுரை, அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.