கார் நின்ற இடத்தை விட்டு தார்ச்சாலை அமைப்பு -சமூக வலைதளங்களில் வைரல்
‘நடுவுல கொஞ்சம் ரோட்டை காணோம்’ கார் நின்ற இடத்தை விட்டு தார்ச்சாலை அமைப்பு சமூக வலைதளங்களில் வைரல்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குமரன் ரோடு பென்னிகாம்பவுண்ட் பகுதியில் தார்ச் சாலை அமைக்கும் பணி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. இதில் ஒரு ஓட்டல் முன் ரோட்டோரம் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வழியாக தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்தது. சாலை அமைக்கம் பணியில் ஈடுபட்டவர்கள், அந்த காரை அகற்றுமாறு கூறியுள்ளனர். ஆனால் கார் உரிமையாளர் காரை பூட்டிவிட்டு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் கார் நிற்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு தார்ச் சாலை அமைத்தனர். இந்த நிலையில் நேற்று காரை நின்ற இடத்தை தவிர்த்து தார்ச்சாலை அமைக்கப்பட்டதை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். 'நடுவுல கொஞ்சம் ரோட்டைக்காணோம்' என்ற தலைப்பில் படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நள்ளிரவில் சாலை அமைக்கும் பணி நடந்துள்ளது. கார் உரிமையாளர் அங்கு இல்லாததால் பணி பாதிக்கக்கூடாது என்பதற்காக கார் நிற்கும் இடத்தை மட்டும் விட்டு தார்ச் சாலை அமைத்துள்ளனர். விரைவில் அங்கு சாலை அமைக்கப்படும். இருப்பினும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.