வேலூர் பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
ஆடி அமாவாசை
இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களின் நினைவாக தானம் செய்வார்கள். மேலும் காக்கைக்கு உணவு படைப்பார்கள். ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட சிறப்பானதாகும்.
இந்த 3 மாதங்களில் வரும் அமாவாசை தினத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபடுவது வழக்கம். இதன்மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதன்படி ஆடி அமாவாசையையொட்டி இந்துக்கள் புனித தீர்த்தங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர். கொரோனோ தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கூட்டம் குறைவாக காணப்பட்டது.
ஆனால் இந்தாண்டு ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் செய்தனர். பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர். ஆடி அமாவாசையையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.