உதவியாளர் பொருட்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் கடை முன்பு பெண்கள் தர்ணா திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி அருகே ரேஷன் கடையில் உதவியாளர் பொருட்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-06-25 17:02 GMT


ராமநத்தம், 

திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே லெக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் லெக்கூர், தச்சூர், வெங்கனூர், டி.ஏந்தல், ஒரங்கூர் ஆகிய 5 கிராமங்களில் ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. இந்த 5 கடைகளுக்கும் ஒரே ஒரு விற்பனையாளர் மட்டும் உள்ளார்.

இந்த நிலையில் வெங்கனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு ராணி என்பவரை (பொறுப்பு) விற்பனையாளராக கூட்டுறவு சங்கம் மூலமாக நியமிக்கப்பட்டார். அவர் கடையில் பொருட்கள் வழங்கி வந்த நிலையில், கடையில் உதவியாளராக அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் வேலை செய்து வந்தார்.

கிராம மக்கள் எதிர்ப்பு

இந்த நிலையில் நேற்று ரேஷன் கடை திறக்கப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் அங்கு , விற்பனையாளர்(பொறுப்பு) ராணி வரவில்லை. மாறாக கடையில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் தான், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கி உள்ளார். இதற்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏ னெனில், தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறார், எனவே கடை விற்பனையாளர் நேரில் வந்து பொருட்களை வழங்கிட வேண்டும் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடையை முற்றுகையிட்டனர்.

தர்ணா போராட்டம்

அதற்குள் அங்கிருந்த உதவியாளர், ரேஷன் கடையை பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். தொடர்ந்து கிராமத்து பெண்கள் கடையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், அதிகாரிகள் யாரும் அங்கு வராததால் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

மேலும் தங்கள் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு நிரந்தர விற்பனையாளரை உடனடியாக நியமித்திட வேண்டும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்