கொடி நாள் நிதியாக ரூ.91 லட்சம் வசூலிக்க இலக்கு

நீலகிரியில் கொடி நாள் நிதியாக ரூ.91 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

Update: 2022-12-07 18:45 GMT

ஊட்டி, 

நீலகிரியில் கொடி நாள் நிதியாக ரூ.91 லட்சம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

கொடி நாள்

ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந் தேதி நாடு முழுவதும் படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. முன்னாள் படைவீரர்களின் நலத்துறை சார்பில், கொடி நாள் தின விழா ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் கலெக்டர் அம்ரித் கொடி நாள் நிதி வழங்கி, கொடி நாள் வசூலினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நமது நாட்டில் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. போரில் படைப்பணியின் போது உயிரிழந்தோரின் வாரிசுகள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசின் குரூப்-சி, டி பதவிகளில் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.

ரூ.91 லட்சம் இலக்கு

இந்த அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்திட கொடிநாள் நிதி வசூல் தொகை பொதுமக்களிடள் இருந்து பல்வேறு துறை அதிகாரிகளால் திரட்டப்பட்டு வருகிறது. 2021-ம் ஆண்டு கொடி நாளுக்காக ரூ.86.39 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.1.39 கோடி நன்கொடை பெறப்பட்டது. 2022-ம் ஆண்டிற்கு ரூ.91.26 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து 2-ம் உலகப்போரில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் 17 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் ஸ்டேஷன் ஹெட்குவார்டர்ஸ் அலுவலர் கர்ணல் பிரேம்குமார், என்.சி.சி. கமாண்டிங் அலுவலர் கர்ணல் சீனிவாசன், வெலிங்டன் இ.சி.எச்.எஸ். அலுவலர் கர்ணல் சுரேஷ்குமார், முன்னாள் படைவீரர் நல அலுவலக அமைப்பாளர் சேதுபிரபாகரன், மாவட்ட முப்படை வீரர் வாரிய உபதலைவர் ஜான் டேனியல், முன்னாள் படைவீரர் நல கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்