அர்ச்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி
முருக்கன்பள்ளத்தில் அர்ச்சுணன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரி அருகே உள்ள முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவிலின் 49-ம் ஆண்டு மகாபாரத விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைளுடன், அம்மன் திருக்கல்யாணம், பஞ்சபாண்டவர்கள் நகர்வலம், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஓம்சக்தி நாடக குழுவினர்களின் பாண்டவர் பிறப்பு, கிருஷ்ணன் தூது, அரவான் கடபலி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மகாபாரத தெருக்கூத்து நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று அர்சுணன் தபசுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மகாபாரத போரில் கவுரவர்களை வெல்வதற்காக, சிவனிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற வேண்டி, சிறப்பு பூஜைகள் செய்த பின், அர்சுணன் தபசு மரத்தில் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர், மாதனகுப்பம், மேல் அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.