தாமிரபரணி குடிநீரை பாரபட்சமின்றி வினியோகிக்க வேண்டும்
தாமிரபரணி குடிநீரை பாரபட்சமின்றி வினியோகிக்க வேண்டும் சீனிவாசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
விருதுநகர் நகராட்சி கூட்ட அரங்கில் நகரசபைத் தலைவர் மாதவன் தலைமையில் குடிநீர் வினியோகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. சீனிவாசன், துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் ஸ்டான்லி பாபு, என்ஜினீயர் மணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பங்குனி பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் வாரம் ஒரு முறையாவது குடிநீர் வழங்க வேண்டும் என கவுன்சிலர் முத்துராமன் வலியுறுத்தினார். 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கினால் நகர் மக்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் இடைவெளி நாட்களை குறைத்து குடிநீர் வழங்க வேண்டுமென கவுன்சிலர் இந்திரா வலியுறுத்தினார். சில நாட்களுக்கு முன்னால் எங்கள் பகுதியில் குடிப்பதற்கு உகந்த குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதென்றும், அதேபோல் தொடர்ந்து குடிநீர் வழங்க வேண்டுமென்றும் கவுன்சிலர் மதியழகன் கேட்டுக்கொண்டார். ஒரு பகுதிக்கு நல்ல தண்ணீரும், மறுபகுதிக்கு உப்பு தண்ணீரும் வழங்குவது கூடாது. அனைத்து பகுதிகளும் ஒரே மாதிரியாக பாரபட்சமின்றி குடிநீர் வழங்க வேண்டும். தாமிரபரணி கூடுதல் கூட்டு குடிநீர் திட்ட பணியை விரைவுப்படுத்த வேண்டுமென கவுன்சிலர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியதாவது:- ஆனைக்குட்டம் பகுதியில் உள்ள 9 கிணறுகளின் தண்ணீரை குடிக்கலாம் என குடிநீர் வடிகால் வாரியம் சான்று அளித்துள்ளது. எனவே இதனுடன் ஒண்டிப்புலி கோடைகால குடிநீர் தேக்கம், தாமிரபரணி ஆகிய குடிநீரை கலந்து பாரபட்சமின்றி அனைத்து பகுதிகளுக்கும் வினியோகம் செய்ய வேண்டும். இதனை நகராட்சி அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.