தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம்
கோவில்பட்டியில் தமிழ் புலிகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
தமிழ்ப்புலிகள் கட்சியினர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வீர பெருமாள் தலைமையில் கோவில்பட்டி ஜோதிநகரில் இருந்து பாடையில் ஒருவர் இறந்தது போல் படுக்க வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு வக்கீல் தெரு வழியாக உதவி கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்களை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையில் போலீசார் அலுவலகத்துக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட புதூர், விளாத்திகுளம், கோவில்பட்டி, கயத்தாறு ஊராட்சி ஒன்றியங்களில் வசிக்கும் பட்டியல் சாதி அருந்ததியர் மக்களுக்கு மயானம் அமைக்க கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும், பட்டியல் சாதி அருந்ததியர் மக்களுக்கு மயானம் அமைத்து தர வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடந்தது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர் பீமாராவ், வடக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கனியமுதன், எட்டயபுரம் நகர செயலாளர் பாலு மற்றும் 14 பெண்கள் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.