பிற மொழி கலப்பின்றி அனைவரும் தமிழில் பேச வேண்டும்- டாக்டர் ராமதாஸ்
பிற மொழி கலப்பின்றி அனைவரும் தமிழில் பேச வேண்டும் என பிரசார பயணத்தில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பிற மொழி கலப்பின்றி அனைவரும் தமிழில் பேச வேண்டும் என பிரசார பயணத்தில் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழைத்தேடி பயணம்
பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழைத் தேடி என்ற விழிப்புணர்வு பிரசார பயணத்தை சென்னையில் கடந்த 21-ந் தேதி தொடங்கினார். 8 நாட்கள் நடைபெறும் இந்த பிரசார பயணம் 28-ந் தேதி மதுரையில் நிறைவடைகிறது.
இதன் 5-வது நாளான நேற்று விழிப்புணர்வு பிரசார வாகனம் மற்றும் தமிழ் அன்னை சிலையுடன் கூடிய ரதம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதிக்கு வந்தது. அப்போது அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நிர்வாகி சித்தமல்லி பழனிசாமி வரவேற்றார். இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பிற மொழி கலப்பின்றி...
அனைத்து மக்களும் பிற மொழி கலப்பின்றி தமிழில் பேசுவதில்லை. எங்கு தேடியும் தமிழ் கிடைக்கவில்லை எனவேதான் தமிழைத் தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். தமிழைத் தேடி செல்வது என்பது நமக்கு பெருமை படக்கூடிய ஒன்று அல்ல. இது நமக்கு தலைகுனிவு.
மக்கள் அனைவரும் பிற மொழி கலப்பின்றி தமிழில் பேச வேண்டும். தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரசார பயணத்தை அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தேரழுந்தூர் கம்பர் கழக செயலாளர் ஜானகிராமன், குத்தாலம் முத்தமிழ் அறிவியல் மன்ற செயலாளர் ராஜ்குமார், உலகத் தமிழ் கவிஞர் பேரவை மாவட்ட தலைவர் முத்து நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிர்வாகிகள் அன்பழகன், விமல், சுரேஷ், வைத்தி, துரைராஜ், விக்னேஷ், மதன்ராஜ், மஞ்சுநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குத்தாலம் கணேசன் நன்றி கூறினார்.