விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தமிழர் நீதி கட்சி நிதி உதவி

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தமிழர் நீதி கட்சி நிதி உதவி வழங்கப்பட்டது.

Update: 2023-07-16 18:45 GMT

அரியலூர் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பார்த்திபன் என்ற வாலிபரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க போவதை அறிந்த, அந்த இளம்பெண் உடையார்பாளையத்திற்கு திருமண பத்திரிகை வைக்க வந்த பார்த்திபனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் ஏற்பட்டநிலையில், பார்த்திபனே வீட்டில் கொண்டுவந்து விடுவதாககூறி அந்த இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று, தத்தனூர்- கீழவெளி சாலையில் விபத்தை ஏற்படுத்தியதில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இளம்பெண் உயிர் இழந்துள்ளார். இந்த சம்பவத்தையொட்டி இளம்பெண்ணின் காதலன் பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தமிழர் நீதி கட்சி நிறுவனர் சுபா.இளவரசன் தலைமையில் அரியலூர் அண்ணா சிலையருகே கண்டன ஆர்ப்பாட்டமும் அண்மையில் நடைபெற்றது. இதனையடுத்து உயிரிழந்த இளம்பெண்ணின் கிராமத்தில் அவரது உருவப் படத்தை தமிழர் நீதிகட்சி நிறுவனர் சுபா.இளவரசன் திறந்து வைத்து, அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார். தொடர்ந்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும், இளம்பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து உயிரிழந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவுகளை தமிழர் நீதி கட்சியே ஏற்கும் என்றார். இதில் உயர்நீதிமன்ற வக்கீல் கோபாலகிருஷ்ணா, நல்லாசிரியர் ஆசை தம்பி, தமிழர் நீதி கட்சி ஒன்றிய செயலாளர் அறிவுமலை உள்ளிட்ட தமிழர்நீதி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்