தமிழக பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் -கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

அறிவுப்பூர்வமான மாநிலம் என்ற பெருமையை தக்கவைக்க, தமிழக பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

Update: 2023-07-26 22:46 GMT

சென்னை,

மத்திய கல்வி நிறுவனங்கள் தர நிர்ணய ஆணையம் (என்.ஐ.ஆர்.எப்.), 2023-ம் ஆண்டு தரவரிசை பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. ஒட்டுமொத்த தரவரிசையில், தொடர்ந்து 5-வது ஆண்டாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்திருந்தது. இதேபோல் தமிழ்நாட்டில் பல பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், மத்திய கல்வி நிறுவனங்கள் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டிருந்த தரவரிசை பட்டியலில் முன்னிலை வகித்த, தமிழ்நாடு கல்வி நிறுவன பிரதிநிதிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார்.

புறக்கணிப்பு

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரி மற்றும் 10 கல்வி நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதே நேரத்தில், சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் மாநில கல்லூரி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு, சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி பதில் அளித்தார்.

இறுதியாக, கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

காலிப்பணியிடம் அதிகம்

பாரம்பரிய கல்வி நிறுவனங்களுக்கு இடையே கருத்து பரிமாற்றங்கள் ஆரோக்கியமாக இல்லை. அதை உடைக்க விரும்பினேன். அதனால்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தது போல், பல்கலைக்கழகங்களில் நிதி பற்றாக்குறை மற்றும் காலிப்பணியிடங்கள் அதிகமாக இருப்பது உண்மைதான்.

தற்போது கணித பாடம் மிகவும் கடினமானது என மாணவர்கள் நினைக்கின்றனர். அதற்கு காரணம், தற்போது உள்ள ஆசிரியர்கள்தான். ஆனால், கணிதம் மிகவும் எளிமையானது, அழகானது.

தமிழ்மொழியில் ஆய்வுகள்

தமிழ் உலகின் பழமையான, அழகான மொழி. ஐரோப்பிய மொழிகள், தமிழ், சமஸ்கிருத மொழிகளுக்கு ஈடு ஆகாது. தமிழ்மொழியில் அதிக ஆய்வுகள் வர வேண்டும். அதற்கு சில பிரச்சினைகள் உள்ளதாக தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் கூறுகிறது. அதை விரைவில் சரிசெய்ய வேண்டும்.

மத்திய அரசு கொடுக்கும் நிதி மற்றும் பல்வேறு நிதிகளை திரட்டுவதற்கு பல வழிகள் உள்ளது. ஆனால், அதை பல்கலைக்கழகங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று திறன் வாய்ந்த இளைஞர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.

வருத்தம் அளிக்கிறது

புதிய கல்வி கொள்கை சிறப்பானது, புதிய இந்தியாவை உருவாக்க உதவிகரமானது. தற்போது, என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள் ரூ.12 ஆயிரம் ஊதியத்தில், அவர்கள் தகுதிக்கு மிகவும் குறைந்த சுயமரியாதை இல்லாத வேலையை செய்கின்றனர். அது வருத்தம் அளிக்கிறது.

தமிழ்நாடு அறிவுப்பூர்வமான மாநிலம் என்கிற பெருமையை தக்கவைக்க வேண்டும் என்றால், பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்