தமிழகத்தில் மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

Update: 2022-09-26 12:02 GMT

சென்னை,

 அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்தது; சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல் துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர்; மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவின் ஆட்சியில் இருந்த நிலை.

ஆனால், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறி உள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் சர்வ சாதாரணமாக தினசரி நடைபெறுகின்றன. குற்றவாளிகள் அச்சமின்றி சுதந்திரமாக ஆயுதங்களுடன் நடமாடி வரும் நிகழ்வுகள் அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகளாக வெளிவருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளினால், மக்கள் ஒருவித அச்சத்துடனேயே வாழ்கின்றனர். குறிப்பாக, பெண்கள் வீட்டிலிருந்து வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்.

கடந்த வாரத்தில் கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரம் போன்று, வெடிகுண்டு கலாச்சாரமும் தலைதூக்கி உச்சத்தில் உள்ளது. எங்களது ஆட்சியில் சுதந்திரமாக, சட்டப்படி செயல்பட்ட காவல் துறை தற்போது செயலற்று உள்ளது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல், மாய உலகம் ஒன்றில் வாழும் ஒரு நிர்வாகத் திறனற்ற முதல்வரை தமிழகம் பெற்றுள்ளது வேதனைக்குரியது.

எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாசாரம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. தனி மனிதரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஆளும் திமுகவினர் உருவாக்கி வருகின்றனர். இது, அமைதியான தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தான போக்காகும். இனியாவது இந்த திமுக அரசு, வெடிகுண்டு கலாசாரத்தைக் கட்டுப்படுத்தி, தமிழக மக்கள் அச்சமின்றி வாழத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்