தென்னை சாகுபடி திறனில் தமிழகம் முதல் இடம்

தேசிய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் 3-வது இடத்திலும், உற்பத்தி திறனில் முதல் இடத்திலும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-10-12 18:45 GMT


தென்னை சாகுபடி

தமிழகத்தில் விருதுநகர், மதுரை, திருப்பூர், தேனி, தஞ்சாவூர், வேலூர், கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்னை சாகுபடி பரவலாக நடைபெறுகிறது. தேசிய அளவில் 21.7 லட்சம் எக்டேர் நிலத்தில் தென்னை சாகுபடி நடைபெறும் நிலையில் 135.78 லட்சம் டன் தேங்காய் உற்பத்தி ஆகிறது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் 37.71 லட்சம் எக்டேரில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. தேசிய அளவில் தென்னை சாகுபடியில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றுள்ளது. உற்பத்தி திறன் என கணக்கிட்டால் ஒரு எக்டேருக்கு 7.87 டன் தேங்காய் உற்பத்தி ஆகிறது. இது தேசிய அளவில் முதல் இடம் ஆகும்.

உற்பத்தி திறன் ஏக்கருக்கு கேரளாவில் 5.51 டன் ஆகவும், கர்நாடகத்தில் 5.91 டன் ஆகவும் உள்ளது என மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துைற அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள்

கோவை விவசாய பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி நிலையம் தேங்காயின் விலையானது டிசம்பர் வரை கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை இருக்கவும், கொப்பரை கிலோ ரூ.80 ஆக இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய் வரத்து அதிகரித்தால் இந்த விலையில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தற்போது கேரளா மற்றும் கர்நாடகத்தில் இருந்து தேங்காய் வரத்து தொடங்கியுள்ளது. அரவை கொப்பரை விலை அடிப்படையில் தேங்காய் எண்ணெய் விலையில் ஏற்ற, இறக்கம் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகள், தமிழக அரசு தேங்காய் கொள்முதலை நேரடி கொள்முதல் நிலையம் மூலம் செய்யவும், அரவை கொப்பரைக்கு கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்