புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு பெருமை

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு பெருமை என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-27 17:00 GMT

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு பெருமை என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு பெருமை

திருவண்ணாமலையில் மாணவ-மாணவிகளுக்கான வாழ்வில் முன்னேற்றம் குறித்த ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நாளை (இன்று) நடைபெற இருக்கிறது. இதற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். இந்த கட்டிடம் திறக்கப்படுவதற்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை கொண்டாலும் கூட, தமிழர்கள் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால் நமது திருவள்ளுவர், எது நல்லாட்சி? என்று எடுத்துக் கூறினாரோ, அதன் அடையாளமாக செங்கோல் அங்கு நிறுவப்பட உள்ளது. இது எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் நமக்கு கவலையான விஷயம் என்றால், அதையும் அரசியலாக்கி உள்ளனர்.

நன்றி கடிதம்

செங்கோல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நிச்சயமாக அது இங்கிருந்து ஆதீனங்கள் கொண்டு சென்று ஆட்சி மாற்றத்திற்காக வழங்கியுள்ளனர். ஆனால் அதை எங்கேயோ போட்டுள்ளனர். அதை எடுத்து தமிழருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அங்கு வைக்க உள்ளனர். இது காலம் காலமாக கட்டிடம் இருக்கும் வரை செங்கோலும் இருக்கும். அங்கு தமிழரின் பெருமையும் இருக்கும். தமிழர்கள் ஒவ்வொருவரும் இதற்குப் பெருமைப்பட வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக தனது முதல் நன்றி கடிதத்தை பிரதமருக்கு எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால் வேறு எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம் தமிழ்நாட்டு செங்கோலுக்கு கிடைத்துள்ளது. எத்தனை கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தமிழுக்கு என்று பெருமை வரும் போது நீங்கள் அதை அங்கீகரித்திருந்தால் உண்மையில் நீங்கள் தமிழ் பற்றாளர்கள். இல்லை என்றால் உங்கள் தமிழ் பற்றும், அரசியல் சார்ந்தது தான்.

ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காதது குறித்து பலர் பேசுகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார், இதற்காக ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி உள்ளனர். அவர்களுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்று. ஜனாதிபதியே இதை பிரதமர் திறந்தால் தான் நன்றாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். அழைப்பு கூட கொடுக்கவில்லையே என்று கூறுவது, பிரதமரே திறந்து கொள்வது என்று முடிவு எடுத்த பின்னர் வெறும் அழைப்பு கொடுக்க மாட்டார்கள். ஏனென்றால் அவரது வாழ்த்துகளோடு தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

முதலை கண்ணீர்

இன்றைக்கு ஜனாதிபதி மீது அக்கறை கொண்டவர்கள், அவர்கள் இதே ஜனாதிபதிக்கு வாக்களிக்காதவர்கள். ஒரு பழங்குடியின தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட உங்களுக்கு வரவில்லை. ஆனால் இன்று அவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று முதலை கண்ணீர் வடிக்கின்றனர். இன்று போராட்டம் நடத்துபவர்கள், அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கும் போது பழங்குடியினர் என்று தெரியவில்லையா?.

இத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவர் பழங்குடியினர் என்பதன் அடிப்படையிலாவது வாக்களித்தீர்களா?. அவரை பிரதமர் தேர்ந்தெடுத்து ஆதரவு கொடுத்து, பலர் அவரை வரவேற்று வாக்களித்துள்ளனர். அவர்களை போன்று வாக்களித்தவர்களால் தான் அவர் ஜனாதிபதி ஆகி உள்ளார்.

நீங்கள் வாக்களிக்கவில்லை. அவர் ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணம் கூட உங்களுக்கு இல்லை. அப்படியானால் நீங்கள் எப்படி போராட முடியும். அவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிந்தும் நீங்கள் அவருக்கு வாக்களிக்கவில்லையே. நீங்கள் வாக்களிக்காதவர்கள். எனவே உங்களுக்கு போராட்டம் நடத்த தார்மீக உரிமை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்