காவல்துறையின் கையை கட்டிப்போட்டதால் ஏற்பட்ட விளைவை தமிழகம் சந்திக்கிறது -அண்ணாமலை குற்றச்சாட்டு

“காவல்துறையின் கையை கட்டிப்போட்டதால் ஏற்பட்ட விளைவை தமிழகம் சந்திக்கிறது” என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

Update: 2022-11-08 19:38 GMT


"காவல்துறையின் கையை கட்டிப்போட்டதால் ஏற்பட்ட விளைவை தமிழகம் சந்திக்கிறது" என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

இந்தி திணிப்பு

பா.ஜனதா கட்சி சார்பில் "எனது பூத், வலிமையான பூத்" என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

மதுரையில் இந்த திட்டத்தை மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில் இந்தி என்பது கட்டாய மொழிப்பாடமாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் இந்தி 3-வது பாட விருப்பமொழி தேர்வாக உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த தொடங்கி விட்டார்கள்.

இல்லம் தேடி கல்வி உள்பட திட்டத்தின் பெயரை மாற்றி கல்வி கொள்கையை அமல்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். மருத்துவத்தையும், என்ஜினீயரிங் படிப்பையும் தமிழில் கொண்டு வர வேண்டும். ஆனால் அமைச்சர் பொன்முடி, என்ஜினீயரிங் படிப்பு தமிழில் இருப்பதாக கூறினார். ஆனால் 1 லட்சம் பேர் படிக்கும் என்ஜினீயரிங் படிப்பில் வெறும் 69 பேர் தான் தமிழில் படிக்கிறார்கள். அதுவும் 5 கல்லூரிகளில்தான் இருக்கிறது. இதுதான் தி.மு.க. தமிழை வளர்க்கும் லட்சணம்.

கோவையில் குண்டு வெடித்தவுடன், பா.ஜனதாதான் அது சதி திட்டம் என தெளிவாக கூறியது. ஆனால் தமிழக அரசு, அது வெறும் சிலிண்டர் விபத்து என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். நாங்கள் மட்டும் இந்த விவகாரத்தில் மக்களிடம் செல்லாமல் இருந்தால், இறந்த முபின் குடும்பத்திற்கு தி.மு.க., அரசு வேலை கொடுத்து இருப்பார்கள்.

பிரதமர் மோடி வருகை

மதுரையில் கல்லூரி முன்பு இளைஞர்கள் செய்த ரவுடித்தனத்தை பார்த்த போது நெஞ்சம் பதைக்கிறது. தி.மு.க. ஆட்சியில் மதுவுக்கும், கஞ்சாவுக்கும் இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள்.

மதுகுடித்து விட்டால், அவர்களிடம் பயம் போய் விடுகிறது. காவல்துறையின் கையை கட்டி போட்டுவிட்டார்கள்.

சுதந்திரமாக செயல்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். காவல்துறையின் கையை கட்டி போட்டால் விபரீதம் மிக மோசமாக இருக்கும். அதன் விளைவுகளைதான் தமிழகம் தற்போது சந்தித்து கொண்டு இருக்கிறது. இன்னும் தி.மு.க. ஆட்சியில் என்னென்ன பிரச்சினைகள் வரப்போகிறதோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். காவல்துறையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கேட்க தொடங்கிவிட்டார்கள்.

பிரதமர் மோடி, 11-ந்தேதி திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அதற்காக அவர் மதியம் 1.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2.20 மணிக்கு காந்தி கிராமம் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அந்த விழாவிற்குபின் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து இங்கிருந்து 4.40 மணிக்கு விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்கிறார்.

வெள்ளத்தடுப்பு

குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல்களில் பா.ஜனதா இதுவரை பெற்ற வெற்றிகளை விட அதிக இடங்களில் வெற்றிபெறும். பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் 1,204 இடங்களில் போராட்டம் நடத்துகிறோம். இந்த போராட்டம் மூலம் மக்களின் கோபத்தை பறைசாற்றுவோம்.

எங்கள் போராட்டத்திற்கு பிறகு பால் விலையை குறைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குறைந்த அளவு மழைக்கே சென்னை தடுமாறி விட்டது. இன்னும் பெரிய மழைக்கு சென்னை தாங்குமா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். வெள்ளத்தடுப்பு பணிக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர், பிரதமர் மோடியிடம் நேரடியாக வேலை பார்த்தவர். மோடியின் அன்பை முழுமையாக பெற்றவர். அவர் சிறப்பாக பணியாற்றுவார். எனவே அமைச்சர்கள் குறுக்கும், நெடுக்கும் செல்லாமல் இருந்தால் சரி.

இவ்வாறு அவர் கூறினார்.

குறைகளை கேட்டார்

அதனைத்தொடர்ந்து அண்ணாமலை மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் உள்ள காய்கறி சந்தைக்கு நேரில் சென்று வியாபாரிகளிடம் குறைகளை கேட்டார். அப்போது தமிழக அரசின் சொத்துவரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து, பா.ஜ.க. வர்த்தக அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்