தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதற்கான அறிவிப்பு அரசாணையை வெளியிடவில்லை
தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதற்கான அறிவிப்பு அரசாணையை வெளியிடவில்லை என்று பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா கூறினார்.
தாய்மொழி தமிழுக்கு முடிவுரை எழுத நினைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினராக எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் உள்பட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சரின் பொய் பேச்சு தி.மு.க. அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு உகந்தது. கோவையில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து 4 தினங்களாக தமிழக முதல்-அமைச்சர் சம்பவம் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை. தி.மு.க. தனது வாக்கு வங்கியை தக்க வைப்பதற்காக தான் தற்போது என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கொடுத்த கிடுக்கு பிடி அழுத்தத்தால் தான் தமிழக முதல்-அமைச்சர் வேறு வழியின்றி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் கோவையில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜமாத் கூட்டமைப்பு அழைத்து பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ஏன் இந்து அமைப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காது என்று கூறவில்லை. பா.ஜ.க. சார்பில் சட்டமன்றத்தில் 24 உறுப்பினர்கள் இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்திருக்கும், ஏனென்றால் சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு தொடர்பாக பொய்யான கருத்துக்களை கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதற்கான அறிவிப்பு அரசாணையை வெளியிடவில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க. உடன் தான் கூட்டணியில் உள்ளது. எந்த ஒரு அணியுடனும் அல்ல, என்று கூறினார்.