தமிழ்நாடு அரசின் 4-ம் தலைமுறை தொழில் வளர்ச்சி திட்டம் பயன் அளிக்கிறதா?மாணவர்கள் கருத்து
தமிழ்நாடு அரசின் 4-ம் தலைமுறை தொழில் வளர்ச்சி திட்டம் பயன் அளிக்கிறதா? என மாணவர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
தமிழ்நாடு அரசின் 4-ம் தலைமுறை தொழில் வளர்ச்சித்திட்டம் பயன் அளிக்கிறதா? என கோபியில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் கூறினார்கள்.
தொழில் வளர்ச்சித்திட்டம்
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 45 தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) 4-ம் தலைமுறை தொழில் வளர்ச்சித்திட்டம் (4.ஓ) மையங்கள் செயல்பட்டு வருகின்றன. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தலைமையில் 20 சர்வதேச நிறுவனங்கள் இந்த தொழில் மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
ரூ.1,559 கோடியே 25 லட்சம் செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த மையங்களை கடந்த 13-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அரசு ஐ.டி.ஐ. தொழில் மையத்தையும் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
104 மாணவ-மாணவிகள்
ரூ.34 கோடியே 65 லட்சம் செலவில் புதியதொழில் நுட்பத்துடன் கூடிய எந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள், மென்பொருட்கள் இங்கு நிறுவப்பட்டு உள்ளன. ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டியல் ஆட்டோமேஷன் தொழில் நுட்பம், உற்பத்தி, மின்சார வாகனங்கள் பழுது நீக்குதல், இணையதளம் சார்ந்த பிரிவு உள்ளிட்ட புதிய பல்வேறு தொழில் நுட்ப பிரிவுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
தற்போது கோபி ஐ.டி.ஐ.-யில் முதல் மற்றும் 2-ம் ஆண்டுகளில் 232 மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். இதில் 104 பேர் தங்கள் துறை சார்ந்த கூடுதல் தொழில் நுட்ப பயிற்சிகளை 4-ம் தலைமுறை தொழில் வளர்ச்சித்திட்ட மையத்தில் பெற்றுக்கொள்கிறார்கள். இது தங்கள் கல்விக்கு மிகுந்த பயன் அளிப்பதாக மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
வேலைவாய்ப்பு
இதுபற்றி மாணவி கு.சுமதி கூறியதாவது:-
நான் பெரிய கொடிவேரி பகுதியில் வசித்து வருகிறேன். கோபி அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மின்சார பணியாளர் துறையில் 2-ம் ஆண்டு படிக்கிறேன். தற்போது தமிழக அரசு கொண்டு வந்து உள்ள 4.ஓ. தொழில் மையம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. ஐ.டி.ஐ. படித்தாலும் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற முடியும் .
மாணவர் வி.குருபிரசாத் கூறியதாவது:-
எனது ஊர் சத்தியமங்கலம். கோபி ஐ.டி.ஐ.யில் குளிர்பதனம் மற்றும் தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பவியலாளர் பிரிவில் முதல் ஆண்டில் படிக்கிறேன். 4-ம் தலைமுறை தொழில் வளர்ச்சித்திட்ட மையத்திலும் பயிற்சி பெறுகிறேன். இது தொழில் படிப்பை உற்சாகமாக படிக்க தூண்டுதலாக உள்ளது. எதிர்காலத்தில் எனக்கு பெரிய நிறுவனங்களில் சிறந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த திட்டத்தை தமிழக இளைஞர்களுக்கு அளித்து உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
இவ்வாறு அவர்கள் கூறினர்.