5 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டி சென்றார்
5 நாள் பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஊட்டிக்கு சென்றார். கவர்னருக்கு புத்தகம் கொடுத்து கலெக்டர் வரவேற்றார்.
ஊட்டி,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு 5 நாள் பயணமாக நேற்று சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கவர்னர் ஆர்.என்.ரவி புறப்பட்டு, மதியம் 2.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு சென்றார்.
கோவையில் மதிய உணவுக்கு பின்னர் மாலை 3.45 மணிக்கு சாலை மார்க்கமாக கார் மூலம் புறப்பட்டார். மேட்டுப்பாளையம், கோத்தகிரி, தொட்டபெட்டா வழியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மேல் பகுதியில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு மாலை 6.25 மணிக்கு கவர்னர் சென்றார். கவர்னர் வருகையையொட்டி பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து வந்தன.
புத்தகம் கொடுத்து வரவேற்பு
ஊட்டிக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவியை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் புத்தகம் கொடுத்து வரவேற்றார். இதைத்தொடர்ந்து கவர்னர் ராஜ்பவனில் ஓய்வெடுத்தார். கவர்னர் வருகிற 9-ந் தேதி வரை ஊட்டியில் முகாமிடுவதாக கூறப்படுகிறது. 9-ந் தேதி காலையில் ஊட்டியில் இருந்து மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை திரும்புகிறார். ஆனால், இதுவரை கவர்னர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்கப்படவில்லை. கவர்னர் வருகையை ஒட்டி கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.