தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார்
தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வரும் கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மூன்று நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ராஜ்பவனில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, "நான் ஒருபோதும், எந்த காலத்திலும் 'நீட்' விலக்கு மசோதாவுக்கு அனுமதி வழங்க மாட்டேன். மாணவர்கள் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளாக உருவாவதை நான் விரும்பவில்லை.மாணவர்கள் எல்லாவற்றையும் நிறைவு செய்து சிறந்த இடத்துக்கு வர வேண்டும்" என்று பேசினார்.
தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியின் பேச்சு, தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் இடையேயான மோதலுக்கு மேலும் வழிவகுத்தது.தமிழக அரசியல் தலைவர்களும் கவர்னரின் நீட் பற்றிய கருத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.