கடந்த ஆண்டு அமலுக்கு வந்த தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55-ஏ சட்டப்படி செல்லாது -ஐகோர்ட்டு உத்தரவு

கடந்த ஆண்டு அமலுக்கு வந்த தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55ஏ சட்டப்படி செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-14 23:21 GMT

சென்னை,

கோவையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டு கடன் வாங்கியவர், தவணை தொகையை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்த வங்கி நிர்வாகம், கடன் வாங்கிய வீட்டை கையகப்படுத்தியது. பின்னர், அந்த வீட்டை பொது ஏலம் விட்டது.

இதில் ஏலம் எடுத்தவர் பெயருக்கு, வீட்டை பத்திரப்பதிவு செய்யக்கோரி பொள்ளாச்சி சார்பதிவாளரிடம் விண்ணப்பித்தபோது. அதை அவர் நிராகரித்தார்.

இந்த சொத்தை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் முடக்கம் செய்துள்ளது. அதனால், பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி உத்தரவிட்டது.

ஒரு ஆண்டு மட்டும்

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், தனியார் வங்கி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார். அப்போது, பத்திரப்பதிவு துறை சார்பில் ஆஜரான வக்கீல், ''ஒரு சொத்து முடக்கப்பட்டிருந்தால், அந்த சொத்தை தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55ஏ-வின் கீழ் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கித் தரப்பு வக்கீல், ''ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி, பிரிவு 83-ன் கீழ் ஒரு சொத்து முடக்கம் செய்யப்பட்டால், அந்த முடக்க உத்தரவு ஒரு ஆண்டுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பின்னர், அந்த உத்தரவு தானாகவே காலாவதியாகி விடும். 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த சொத்தை முடக்கம் செய்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகி விட்டது'' என்று வாதிட்டார்.

செல்லாது

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இதுபோன்ற ஏராளமான வழக்குகள் இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு பத்திரப்பதிவு விதி 55ஏ-வை நேரடியாக எதிர்த்து இந்த வழக்கு தொடரப்படவில்லை. இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டு, லட்சுமிதேவி வழக்கில் பிறப்பித்த தீர்ப்பின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி அமலுக்கு வந்த விதி 55-ஏ செல்லுபடியாகுமா? என்பதை பரிசோதிக்க வேண்டியது உள்ளது. இந்த விதி, சுப்ரீம் கோர்ட்டு மற்றும் இந்த ஐகோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது. சொத்து மாற்றம் சட்டப்பிரிவுகளுக்கு எதிராகவும் உள்ளது. எனவே, இந்த சட்டப்பிரிவு சட்டப்படி செல்லுபடியாகாது. இந்த சட்டப்பிரிவின் கீழ் சொத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று சார் பதிவாளர் கூற முடியாது.

பத்திரப்பதிவு

மேலும், ஜி.எஸ்.டி. சட்டப்படி ஒரு ஆண்டுக்கு மட்டுமே சொத்தை முடக்க முடியும். அதன்படி, முடக்க உத்தரவும் காலாவதியாகி விட்டது. பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று சார் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்.

15 நாட்களுக்குள் பத்திரப்பதிவு செய்து கொடுக்க சார் பதிவாளருக்கு உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்