தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம்

நாகையில் தமிழ்நாடு நாள் விழா ஊர்வலத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-18 18:45 GMT


நாகையில் தமிழ்நாடு நாள் விழா ஊர்வலத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு நாள் விழா

நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக நாகை கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தது. தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்பட கண்காட்சியினை கலெக்டர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மொழிவாரி மாநிலமாக பிரிப்பு

தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென்று தனித்தாயகம் அல்லது மாநிலம் உருவானதை குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்கு பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த நிலையில் அதை இந்திய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இக்கோரிக்கை முதலில் ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. கலவரங்களும் ஏற்பட்டன. இதனால் மத்திய அரசு வேறு வழியின்றி 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந்தேதி இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்தது.

இதன்படி, சென்னை மாநிலத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளை கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மைசூர் மாநிலங்கள் நிறுவப்பட்டன. சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளும், திருவிதாங்கூரின் தமிழ் பகுதிகளும் இணைக்கப்பட்டு சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது.

பெயர் மாற்றம்

சென்னை மாநிலத்தில் முதல்வராக அண்ணா பொறுப்பேற்ற பிறகு 18 ஜூலை 1968-ல் சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு எனப்பெயர் மாற்ற சென்னை மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந்தேதி தை பொங்கலன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

தமிழ்நாடு அமைந்த நாளை சிறப்பாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. இந்தநிலையில் 2021-ம் ஆண்டு புதியதாக பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு ஜூலை மாதம் 18-ந் தேதியை தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்தது.

பாராட்டு சான்றிதழ்

அதனைத்தொடர்ந்து நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது என்றார். இதை தொடர்ந்து தமிழ்வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழா கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, தமிழ் வளர்ச்சி துறை இர்பத் பர்ஜான் உள்பட பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்