இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

Update: 2023-05-01 23:44 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி வருகிற 7-ந் தேதி 2-ம் ஆண்டை நிறைவு செய்து 3-ம் ஆண்டை தொடங்குகிறது.

இந்த சூழலில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் தமிழக அரசியல் சூழல் மற்றும் மக்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

அமைச்சரவையில் மாற்றம்?

அதேநேரம், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அதற்கேற்ப பணியாற்றும் வகையில் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அத்துடன் ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், இது குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் இது தொடர்பாக அரசு சார்பில் எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

உதயநிதி ஸ்டாலின்

முன்னதாக, தி.மு.க. அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனின் இலாகா கடந்த ஆண்டு மார்ச் மாதம் பறிக்கப்பட்டு அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இலாகா வழங்கப்பட்டது.

அந்த துறையில் அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு கடந்த டிசம்பர் 14-ந் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு, உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீஷன் ஆகியோருக்கு எதிராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்று ஆடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ குரல் தன்னுடையது அல்ல என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 முறை விளக்கம் அளித்தார்.

அதே நேரத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அந்த ஆடியோ குரலை தடயவியல் சோதனைக்கு உட்படுத்த தயார் என்று அறிவிக்காததும், இந்த ஆடியோவை வெளியிட்ட தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடராததும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளன.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சிறிது நிமிடங்கள் மட்டும் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்