2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும் -ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபை தேர்தலும் நடக்கும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.பேசினார்.

Update: 2022-10-26 20:32 GMT


2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபை தேர்தலும் நடக்கும் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.பேசினார்.

பொதுக்கூட்டம்

அ.தி.மு.க.வின் 51-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக திருப்பரங்குன்றம் நிலையூரில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட எம்.ஜி.ஆர். அணி செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் வரவேற்றார். நடிகர் வையாபுரி பேசினார். அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்து விட்டது. நீட் தேர்வு ரத்து, முதியோர் ஓய்வூதிய தொகை உயர்வு, பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000, சிலிண்டர் மானியம் ரூ.100, பெட்ரோல் விலை குறைப்பு, கல்வி கடன் ரத்து என தேர்தலின் போது தி.மு.க. சொன்ன பொய்களை அடுக்கி கொண்டே போகலாம். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெறும் 3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றியை இழந்தோம். மக்கள் தி.மு.க.விற்கு ஓட்டு போட்டதற்கு வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

மக்கள் ஏக்கம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு போய் இருக்கிறது. தினமும் கொலை, கொள்ளை அரங்கேறி கொண்டு இருக்கிறது.. ஆனால் முதல்-அமைச்சர் ஸ்டாலின் அதை எல்லாம் மறைத்து தினமும் விளம்பரம் தேடி கொண்டு இருக்கிறார். அமைச்சர்கள் மக்கள் நலனை பற்றி கவலைப்படுவதில்லை. தங்களது வளர்ச்சிக்காகவே நிர்வாகம் செய்கிறார்கள். எப்போது மீண்டும் தேர்தல் வரும் என்று தமிழக மக்கள் ஏக்கத்தில் இருக்கிறார்கள். நான் நிச்சயமாக கூறுகிறேன், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும். அதில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்