தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு அறிவிப்பு வரவேற்கத்தக்கது -ராமதாஸ் டுவிட்டர் பதிவு
தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு அறிவிப்பு வரவேற்கத்தக்கது டாக்டர் ராமதாஸ் டுவிட்டர் பதிவு.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு, நடப்பாண்டில் வரும் அக்டோபர் 15-ந்தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்த தேர்வுகள் நடப்பாண்டில் இன்னும் அறிவிக்கப்படாததை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்ட நான், உடனடியாக நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
அதைத்தொடர்ந்து தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு என்பது மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கான சிறந்த கருவி ஆகும்.
இந்த தேர்வை வாய்ப்புள்ள வழிகளில் எல்லாம் விரிவுபடுத்தவேண்டும். தமிழ்நாட்டில் மத்திய-மாநில பாடத்திட்டங்களின் கீழ் 10 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் 11-ம் வகுப்பு பயிலும் நிலையில், அவர்களில் குறைந்தது 5 லட்சம் பேராவது இந்த தேர்வை எழுதுவதை அரசு உறுதி செய்யவேண்டும். அதற்காக 1,500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் வெகுமதியை மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 5 ஆயிரம் மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
அதேபோல், தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது 50 சதவீதம் இடஒடுக்கீடு வழங்கப்படுகிறது. இதை 80 சதவீதம் ஆக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.