தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரெயில்.. தென் மாவட்ட மக்களுக்கு வாய்ப்பு

சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2024-05-13 06:59 GMT

திருவனந்தபுரம்:

கோடை விடுமுறை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில்வே நிர்வாகம் சிறப்பு ரெயில்களை இயக்குவது வழக்கம். இந்த ஆண்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மக்கள் பயன்பெறும் வகையில் சென்னையில் இருந்து மதுரை, ராஜபாளையம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு கோடை விடுமுறை சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பெட்டிகள் கொண்ட இந்த சிறப்பு ரெயில் வரும் 16-ம் தேதி முதல், வாரம் இருமுறை இயக்கப்பட உள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கோடை விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை, ராஜபாளையம், புனலூர், கொல்லம் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் (வண்டி எண் 06035) மே 16 முதல் ஜூன் 29-ம் தேதி வரை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06036) மே 17 முதல் ஜூன் 30 வரை வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரை, குன்டரா, கொல்லம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

கொல்லம்-செங்கோட்டை வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டபின், இந்த வழித்தடத்தில் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்