பூசாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தை அறிய 4 கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு
பூசாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டத்தை அறிய 4 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓமலூர்:
சிறுத்தை புலி நடமாட்டம்?
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மூக்கனூர் பகுதியை சேர்ந்த ெதாழிலாளி கோவிந்தராஜ். இவர், 5 வெள்ளாடுகளை வைத்து அருகில் பூசாரிப்பட்டி வைரன்காடு தேன்கல்கரடு பகுதியில் மேச்சலுக்கு விடுவது வழக்கம். அப்படி மேய்ச்சலுக்கு விட்ட ஆடுகளில் ஒன்றை காணவில்லை. மற்ற 4 ஆடுகளை தேடிச் சென்ற கோவிந்தராஜை விலங்கு ஒன்று துரத்தி உள்ளது. அந்த விலங்கிடம் இருந்து கோவிந்தராஜ் தப்பி வந்தார்.
அந்த விலங்கு புதரில் பதுங்கி இருந்ததாகவும், அது சிறுத்தை புலியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்த டேனிஸ்பேட்டை வனச்சரக அலுவலர் தங்கராஜ் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் காட்டு பகுதியில் சுற்றி திரிந்த ஆடுகளை மீட்டு வனத்துறையினர் கோவிந்தராஜிடம் ஒப்படைத்தனர். பூசாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டது.
கண்காணிப்பு கேமராக்கள்
எனவே சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்ததாக தெரியவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த பகுதியில் வேட்டை நாய்கள், காட்டு பூனைகள் சுற்றி திரிந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தெரிகிறது.
இருந்தாலும் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனவே அந்த பகுதிக்கு யாரும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும், காட்டுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.