விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீச்சல் பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி அளிக்கும் திட்டம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திட தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, திருவாரூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கட்டணம்
இந்த பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் 4-ந் தேதி வரை நடக்க உள்ளது. மாதத்திற்கு 2 முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம் ரூ.1,180 ஆகும். பயிற்சி கட்டணத்தினை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
கட்டணம் செலுத்த வரும் போது ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் 1 மணி நேரம் ஆகும். நீச்சல் குளம் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும். மகளிருக்காக பயிற்சி மாலை 4 மணி முதல் 5 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை
உறுப்பினர் அல்லாதவர்களுக்கு 1 மணி நேரத்திற்கான நீச்சல் குள பயன்பாட்டுக் கட்டணம் ரூ.59 ஆகும். மேலும், உறுப்பினர்களுக்கான மாத சந்தா ரூ.708, காலாண்டு சந்தா ரூ.1,416, அரையாண்டு சந்தா ரூ.2 ஆயிரத்து124, ஆண்டு சந்தா ரூ.3 ஆயிரத்து 540 மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான (2 பெரியவர்கள் மற்றும் 2 குழந்தைகள்) ஆண்டு சந்தா ரூ.7 ஆயிரத்து 80 மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு சந்தா ரூ.2 ஆயிரத்து 360 செலுத்தப்பட வேண்டும்.
மேற்படி சந்தா பயிற்சி கட்டணம் மற்றும் சந்தா தொகைகளை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரையோ, 7401703448 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.