முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான நீச்சல் போட்டிகளில் கல்லூரி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நீச்சல் போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான வாலிபால் போட்டி தனித்தனியாகவும், மாணவர்களுக்கான கால்பந்து, நீச்சல் போட்டிகளும் நடைபெற்றன.
200 மீட்டர் பிரீ ஸ்டைல், பிரஸ்ட் ஸ்ட்டோக், பேக் ஸ்ட்டோக், பட்டர் பிளை, 400 மீட்டர் தனி நபர் மெட்லே ஆகிய 5 வகையான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
589 பேர் பங்கேற்பு
நீச்சல் போட்டிகளில் 40 மாணவர்களும், கால்பந்து போட்டியில் 264 மாணவர்களும், வாலிபால் போட்டிகளில் 285 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 589 பேர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் பரிசுத்தொகையாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.
மாவட்ட அளவிலான முதல் இடம் பிடித்த வீரர்-வீராங்கனைகளும், குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடைப்பந்து-கிரிக்கெட்
இதே விளையாட்டு அரங்கத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவுள்ளது.