கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் போட்டி

பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நீச்சல் போட்டி நடந்தது.

Update: 2022-10-29 18:45 GMT

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நீச்சல் போட்டிகள் பாளையங்கோட்டை சாந்திநகர் விளையாட்டு கிராமத்தில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் நாகர்கோவில் எஸ்.டி.இந்து கல்லூரி முதல் இடத்தையும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி அணி 2-வது இடத்தையும், நாங்குநேரி அருள்மிகு பன்னிருபிடிஅய்யன் கல்லூரி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி அணிகள் 3-வது இடத்தை பிடித்தது.

மாணவிகள் பிரிவில் நாங்குநேரி அருள்மிகு பன்னிருபிடி அய்யன் கல்லூரி அணி முதல் இடத்தையும், நாகர்கோவில் ஸ்ரீ அய்யப்பா பெண்கள் கல்லூரி அணி 2-வது இடத்தையும், நாகர்கோவில் பெண்கள் கிறித்துவ கல்லூரி, கன்னியாகுமரி அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அணிகள் 3-வது இடத்தை பிடித்தது. தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவரும், தமிழ்நாடு நீச்சல் கழக உதவி செயலாளருமான திருமாறன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை பரிசாக வழங்கினார். இதில் நெல்லை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் லஷ்மணன், பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை உதவி பேராசிரியர் சேது உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பல்கலைக்கழக விளையாட்டு மைய இயக்குனர் ஆறுமுகம் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்