அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் தொழிலாளி மர்ம சாவு
அயோத்தியாப்பட்டணம் அருகே கல்குவாரியில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அயோத்தியாப்பட்டணம்:
ேசலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மின்னாம்பள்ளி செல்லியம்மன் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் கிராமத்தை சேர்ந்த சாம்ராஜ் (வயது 34) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கல்குவாரியில் கவிழ்ந்து கிடந்த டாக்டருக்கு அருகில் சாம்ராஜ் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது உயிரிழந்த சாம்ராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார், அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதன்பின்னர் உயிரிழந்த சாம்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காரிப்பட்டி போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் சாம்ராஜ் இறந்தாரா? அல்லது டிராக்டருடன் தவறி விழுந்து பலியானாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.