நடத்தையில் சந்தேகப்பட்டு மருமகள் மீது திராவகம் வீச்சு: அ.தி.மு.க. பெண் பிரமுகர் கைது

நடத்தையில் சந்தேகப்பட்டு மருமகள் மீது திராவகம் வீச்சு அ.தி.மு.க. பெண் பிரமுகர் கைது.

Update: 2023-03-13 18:48 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் கலிவரதன் மனைவி ஆண்டாள். இவர், விருத்தாசலம் அ.தி.மு.க. நகர துணை செயலாளராக உள்ளார். இவரது மகன் முகேஷ்ராஜ் (வயது 32). இவரது மனைவி கிருத்திகா (26). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் முகேஷ்ராஜ் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது மாமியார் ஆண்டாள் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கிருத்திகா, தனது அறையில் செல்போன் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது அறைக்குள் திடீரென ஆண்டாள் சென்று, யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாய் என கேட்டு அவரை திட்டியுள்ளார்.

பின்னர் வீட்டின் கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) எடுத்து வந்து கிருத்திகாவின் முகம் மற்றும் உடலில் ஊற்றினார். மேலும் கொசு விரட்டி திரவத்தை அவரது வாயில் ஊற்றி கொலை செய்யவும் முயன்றதாக தெரிகிறது. தகவல் அறிந்த போலீசார் கிருத்திகாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கிருத்திகாவின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு கிருத்திகா அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டாளை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்