ஒரேநாளில் 3 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 3 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூரை அடுத்த கருகம்புத்தூரை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சைல்டு லைன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், விரிஞ்சிபுரம் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அதில், வேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி உள்ள 16 வயது மாணவிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 26 வயது வாலிபருக்கும் 10-ந் தேதி மணமகனின் வீட்டில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இதேபோல் குடியாத்தம் அருகே உள்ள செட்டிக்குப்பத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்கு 9-ந் தேதி நடக்க இருந்த திருமணமும், வேலூரை அடுத்த அத்தியூரை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவிக்கு 10-ந் தேதி நடக்க இருந்த திருமணமும் சைல்டுலைன் அலுவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. 3 மாணவிகளின் பெற்றோரிடமும் பெண்ணுக்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும் என எழுதி வாங்கப்பட்டது. பின்னர் 3 பேரும் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.