ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-08-13 22:40 GMT

ஈரோடு

ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ரேஷன் அரிசி கடத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர் பகுதிகளில் தமிழக -கர்நாடக எல்லை பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அருகில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். போலீஸ் சோதனையை மீறியும் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சரக்கு ஆட்டோவில் ஒரு கும்பல் ரேஷன் அரிசியை கடத்தியபோது, ஆசனூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் அதை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜெகநாதன் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதை அந்த பெண் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அந்த பெண் போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்கும் ஆடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பணி இடைநீக்கம்

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனுக்கு இதுபற்றி தெரியவரவே அவர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலிடம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்டது உறுதியானது. அதன்பின்னர் அவர்கள் இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்