ரூ.500 லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
நிலத்தை அளந்து வரைபடம் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நெல்லை:
நிலத்தை அளந்து வரைபடம் வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
நிலத்தை அளந்து வரைபடம் வழங்க...
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வட பகுதியைச் சேர்ந்தவர் செல்லம். இவர் பாளையங்கோட்டை கீழநத்தம் கிராமத்தில் உள்ள வீட்டுவசதி பிரிவு காலனியில் 5½ சென்ட் நிலம் வாங்கி இருந்தார். அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக இடத்தை அளந்து தருமாறு வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து இருந்தார்.
அந்த இடத்தை அளப்பதற்கு செல்லத்திடம் அதிகாரிகள் அனுமதி கடிதம் வழங்கினார்கள். அந்த கடிதத்தை அந்த பகுதியில் பணியாற்றும் வீட்டு வசதி வாரிய சர்வேயர் சின்னையாகுமாரிடம் செல்லம் வழங்கினார்.
இதையடுத்து கடந்த 23-8-2005 அன்று சர்வேயர் சின்னையாகுமார், செல்லத்தின் நிலத்தை அளந்து கொடுத்து விட்டு அதற்கான வரைபடம் தயாரித்து தருவதாக கூறியுள்ளார். இதற்கு ரூ.500 லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
சர்வேயர் கைது
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லம், இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயன மை தடவிய ரூ.500-ஐ செல்லம், வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் சர்வேயர் சின்னையாகுமாரிடம் வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார், சின்னையாகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
3 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் முரளி, குற்றம் சாட்டப்பட்ட சர்வேயர் சின்னையாகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ராஜகுமாரி ஆஜரானார்.