திருப்பரங்குன்றம் மலையில் 'ரோப்கார்' அமைக்க சர்வே பணி தொடக்கம்

திருப்பரங்குன்றம் மலையில் ரோப்கார் அமைப்பதற்கான சர்வே பணி தொடங்கியது.

Update: 2023-08-24 20:54 GMT

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் மலையில் ரோப்கார் அமைப்பதற்கான சர்வே பணி தொடங்கியது.

சிவலிங்க வடிவமாக மலை

திருப்பரங்குன்றம் மலையானது சிவலிங்க வடிவமாக அமைந்துள்ளது. அதனால்சிவபெருமானே மலையாக காட்சி தருவதாக எண்ணி பக்தர்கள் மலையை வணங்கி வருகிறார்கள். 1050 அடி உயரம் கொண்ட மலையை வடதிசையில் இருந்து பார்த்தால் கைலாய மலைபோலவும், தெற்கு திசையில் இருந்து பார்த்தால் பெரிய யானை படுத்து இருப்பது போலவும், கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் பெரிய பாறை போன்றும் தெரியும்.

3 கி.மீ. சுற்றளவு கொண்ட இந்த மலையை தினமும் சுற்றி வந்து வழிபட்டால் வினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று தேவாரத்தில் திருஞானசம்பந்தர் கூறியுள்ளார்.

மச்சமுனி சித்தர் - கங்கை தீர்த்தம்

மலையின் உச்சியில் காசிவிசுவநாதர் கோவில், மலை மேல் குமரருக்கு என்று தனி சன்னதி, தெய்வீகப் புலவர் நக்கீரரின் பாவ விமோசனத்திற்காக முருகப்பெருமான் தன் திருக்கரத்தில் உள்ள "வேல்" கொண்டு மலையை பிளந்து உருவாக்கிய காசிக்கு நிகரான கங்கை தீர்த்தகுளம்(சுனை) உள்ளது. இந்த குளத்தில் மீனாக மச்சமுனி சித்தர் அவதரிப்பதாக நம்பப்படுகிறது.

இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வேல் எடுக்கும் திருவிழா நடைபெறும்.. இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேல் எடுத்து மலைமேல் குமரரின் சன்னதிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் புனிததீர்த்த குளத்தில் தங்கவேலுக்கு மகா அபிஷேகம் நடக்கும். அன்று பக்தர்கள் மலைக்கு வந்து சாமி தரிசனம் மலை உச்சியில் இருந்து பார்த்தால் மீனாட்சி அம்மன் கோவிலின் ராஜகோபுரங்களும், மதுரை நகரின் அழகிய தோற்றமும், ஊரின் கட்டமைப்புகளும், பச்சைபசேலென்று வயல்வெளிகளும் ரம்மியமாக தெரியும். இதை ஒரு சிலர் மட்டுமே மலைக்கு சென்று ரசிப்பார்கள். பெரும்பாலானோர் மலை அடிவாரத்தில் இருந்து மலையை மேல்நோக்கி பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர். மலையில் புதிய படிக்கட்டு பாதை இருந்த போதிலும் அதை முதியோர், சிறுவர்கள் பயன்படுத்துவதில் சிரமப்படுகிறார்கள்.

தினத்தந்தி செய்தியால் சர்வே

சட்டசபையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ரோப்கார் வசதி வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும் தினத்தந்தி நாளிதழில் இதுதொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மலை மேல் ரோப்கார் அமைப்பதற்காக ஐ.டி. காட் நிறுவன சர்வேயர்களால் நேற்று மலை படிக்கட்டு பாதையில் சர்வே பணி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்