பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

கூடலூர் அருகே மதுரை கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சலவைத்தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2023-02-02 18:45 GMT

கூட்டுக் குடிநீர் திட்டம்

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ரூ.1,295 கோடி செலவில் மதுரைக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும், புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இதற்காக தேனி மாவட்டம், கூடலூர் குருவனூற்றுப்பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டி அங்கு இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டினால் தண்ணீர் தேங்கி துணிகளை சலவை செய்ய முடியாத நிலை ஏற்படும். அதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என சலவைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

கோரிக்கைகள்

அப்போது சலவைத் தொழிலாளர்கள், சேதம் அடைந்த குடியிருப்புகளை சீரமைத்து தரவேண்டும், பாதை அகலப்படுத்திக் கொடுக்க வேண்டும், படித்துறை கட்டித் தரவேண்டும், மின்சாரம் இணைப்பு தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதனை நிறைவேற்றுவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். 6 மாதங்களுக்கு மேலாகியும் கோரிக்கை தொடர்பான எந்த பணிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என தெரிகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் நேற்று லோயர்கேம்பிலிருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தில் லோயர்கேம்ப் வண்ணான்துறை பகுதியில் புதிய குழாய்கள் பதிக்கும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதில் மதுரை மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிசாமி தலைமையில் உதவிசெயற்பொறியாளர் கணேசமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது கூடலூர் சலவைத் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர், அதிகாரிகள் எங்களுக்கு உறுதியளித்த கோரிக்கைகளை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித்தரவேண்டும் என அதிகாரிகளிடம், மனு கொடுத்தனர். ஆய்வின்போது அதிகாரிகளை சந்தித்து சலவைத்தொழிலாளர்கள் மனு கொடுத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்