தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் ஆய்வு
தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் ஆய்வு
கோவை
கோவையில் உள்ள சாலைகளில் கோவை-சத்தி சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்த சாலையில் கோவையில் இருந்து கரட்டுமேடு பகுதி வரை சில இடங்களில் இருவழிச்சாலையாக இருக்கிறது. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த சாலையில் சரவணம்பட்டியில் இருந்து கரட்டுமேடு வரை 1.8 கி.மீ. தூரத்துக்கு 4 வழிச்சாலையாகவும், குரும்பபாளையம் முதல் புளியம்பட்டி வரை 26 கி.மீ. தூரத்துக்கு 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராகவும் அகலப்படுத்தும் பணி ரூ.73.32 கோடியில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் கீதா கோவைக்கு வந்தார். பின்னர் அவர் சாலை பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், விரைவில் முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது சேலம் தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், சேலம் கோட்ட பொறியாளர் குப்புசாமி உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.