ரெயில் நிலையங்களில் அசம்பாவிதத்தை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் -ஐகோர்ட்டு

அசம்பாவிதங்கள் நடப்பதை தவிர்க்கும் வகையில் ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-27 20:58 GMT

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மாநிலம் முழுவதும் முக்கியமான இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக இடைக்கால உத்தரவும் பிறப்பித்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் கண்டனம்

அப்போது, மாநிலத்தில் மொத்தம் உள்ள 442 ரெயில் நிலையங்களில் 35 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 407 ரெயில் நிலையங்களில் 2024-2025-ம் ஆண்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் பாதுகாப்பில் அக்கறை இல்லாமல் ரெயில்வே நிர்வாகம் இருப்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆகிறது என்று கேள்வி எழுப்பினர்.

தவணை முறையில் நிதி

அதற்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நிதி, தவணை முறையில் வழங்கப்படுகிறது. அதனால் இந்த இவ்வளவு காலம் ஆகிறது என்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

2016-ம் ஆண்டு முதல் இவ்வழக்கில் பல்வேறு உத்தரவுகளை இந்த ஐகோர்ட்டு பிறப்பித்துள்ளது. ஆனால், 7½ ஆண்டுகளாகியும் 10 சதவீத ரெயில் நிலையங்களில்கூட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அதனால், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

அசம்பாவிதம்

இதுபோன்ற பணிகளுக்கு நிதி நிலையை காரணம் காட்டக்கூடாது. எதிர்காலத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அதற்கான கால அட்டவணையை தெரிவிக்க வேண்டும். வழக்கை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்