நெல் கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருத்தணி, பள்ளிப்பட்டு , ஆ ர் .கே .பேட்டை ஆகிய 3 தாலுகாவை சேர்ந்த விவசாயிகளுக்கு திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சத்யா தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை , வேளாண்மைத்துறை , மின்சாரத்துறை , கால்நடைத்துறை , கூட்டுறவுத்துறை மற்றும் திருத்தணி சர்க்கரை ஆலை துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் தலையீடு இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர். அதில், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் உள்ளது. விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் ரூ.60 வரை கமிஷன் வாங்குகின்றனர்.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் முறையான அறிவிப்பு பலகை வைப்பதில்லை , வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகளிடம் நேரடி நெல்கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்கியுள்ளனர், அதனை மீட்டு தரவேண்டும். மேலும், அரசியல் கட்சியினரின் தலையீட்டை கட்டுபடுத்த நெல்கொள்முதல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
இதே போல் திருத்தணி தாலுக்காவில் உள்ள கூட்டுறவு வேளாண்மை அலுவலகத்தில் யூரியா தட்டுபாடு உள்ளது. இதனால் ரூ.267 விற்க வேண்டிய யூரியாவை ரூ.500-க்கு விற்பனை செய்கின்றனர். திருத்தணி கோட்டத்தில் தேங்காய் கொள்முதல் நிலையம், வெல்லம் கொள்முதல் நிலையம் அமைத்து தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தது.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு வெட்டுகூலி டன் ஒன்றுக்கு ரூ.100 கமிஷன் வாங்கிய அதிகாரியின் பெயரை ஆர்.டி.ஓ.விடம் வெளிப்படையாக விவசாயிகள் தெரிவித்தனர்.