சேலம் மாநகர் பகுதியில் 3 ஆயிரத்து 50 கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழப்பு

சேலம் மாநகர் பகுதியில் 3 ஆயிரத்து 50 கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்திருப்பது கண்டுபிடிப்பு

Update: 2023-06-13 19:55 GMT

சேலம் 

சேலம் மாநகர் பகுதியில் 3 ஆயிரத்து 50 கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

சேலம் மாநகர் பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் மாநகர போலீஸ் சார்பில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதே போன்று தனியார் பங்களிப்புடன் ஓட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதன்படி மாநகர் பகுதியில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதே போன்று சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் சமீப காலமாக சேலத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். ஆனால் பல கண்காணிப்பு கேமராவில் எந்தவித காட்சியும் பதிவாகாமல் இருப்பது தெரிந்தது.

ஆய்வு

இதையடுத்து அவற்றை போலீசார் ஆய்வு நடத்திய போது மாநகர் பகுதியில் பொருத்தப்பட்டு இருப்பதில் 2 ஆயிரத்து 525 கேமராக்கள் கடந்த 6 மாதமாக செயல்படாமல் இருப்பது தெரிந்தது. அதே போன்று 525 கேமராக்கள் பதிவுகள் சேமிக்கும் திறன் இழந்து இருப்பதும் தெரிய வந்து உள்ளன.

அதன்படி மொத்தம் 3 ஆயிரத்து 50 கேமராக்கள் செயல் இழந்திருப்பது தெரிய வந்து உள்ளது. இவற்றை சரி செய்யும் நடவடிக்கையில் மாநகர போலீசார் ஈடுபட்டு உளளனர்.

Tags:    

மேலும் செய்திகள்