சோலையாறு அணையில் உபரி நீர் வெளியேற்றம்

முழு கொள்ளளவை எட்டி சோலையாறு அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது

Update: 2022-07-12 16:27 GMT

வால்பாறை

முழு கொள்ளளவை எட்டி சோலையாறு அணை நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் செல்கிறது.

சோலையாறு நிரம்பியது

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை கடந்த 24-ந் தேதி 100 அடியை தாண்டியது. அந்த அணை நேற்று முன்தினம் தனது முழு கொள்ளளவான 160 அடியை தாண்டி நிரம்பியது.

இதனால் சோலையாறில் 2 மின் நிலையங்களும் இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்பிறகு தண்ணீர் வெளியேற் றப்படுகிறது. இது போல் சேடல்பாதை வழியாகவும் தண்ணீர் வெளியேறி செல்கிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

ஆனாலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி பொதுப் பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு அபாய ஒலி எழுப்பி பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அதன்பிறகு அணையில் 3 மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீரை கேரளாவிற்கு வெளியேற்றினர். அதிகாலை 5 மணிவரை 346 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு அணையின் மதகுகள் அடைக்கப்பட்டது.

உபரிநீர்

நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் வால்பாறை பகுதி யில் மழை குறைந்தது. இதனால் சோலையாறு அணையின் நீர் மட்டம் மீண்டும் 163 அடியை தாண்டும் போது மதகுகள் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13 நாட்களுக்கு முன்னதா கவே சோலையாறு அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வால்பாறையில் பெய்யும் மழைநீர் ஆறுகளில் பாய்ந்தோடி சோலையாறு அணையை‌ சென்று அடைகிறது.

இது போல் சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு நீர் வீழ்ச்சி போல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி

நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேல்நீராரில் 94 மி.மீ., கீழ்நீராரில் 80 மி.மீ., வால்பாறையில் 69 மி.மீ, சோலையாறு அணையில் 65 மி.மீ. மழை பெய்தது. இதனால் அணைக்கு விநாடிக்கு 6916 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

சேடல்பாதை வழியாக 3664 கன அடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. சோலையாறு மின் நிலையம் 1-ல் மின் உற்பத்திக்குப்பிறகு 791 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது. சோலையாறு மின் நிலையம் 2 -ல் மின் உற்பத்திக்கு பிறகு 622 கன அடித் தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்