கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

Update: 2022-10-29 18:53 GMT

கந்த சஷ்டி விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, 26-ந்தேதி முதல் நேற்று வரை தினமும் ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை நடைபெற்றது.

இந்தநிலையில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

சூரசம்ஹார விழா

இதையொட்டி காலை 10.30 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு கந்த சஷ்டி மகா அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சக்திவேல் வழங்குதல், கோவில் வளாகத்தில் நான்கு மாட வீதிகளில் சூரசம்ஹார விழா நடக்கிறது.

நாளை (திங்கட்கிழமை) காலை 9.20 மணி முதல் 10.20 மணிக்குள் வள்ளி-தெய்வானை உடனாகிய ஆறுமுக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண காட்சியுடன் திருவீதி உலா நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு சூரசம்ஹார விழா நடைபெறாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தீபாராதனை

கந்த சஷ்டி விழாவையொட்டி புன்னம்சத்திரம் அருகே பாலமலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் நேற்று அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பாலசுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு கந்த சஷ்டி விழாவின் 5-ம் நாளையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் உள்ள புகழிமலை முருகன் கோவில், குளித்தலை அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில், பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்