ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்

எம்.ஜி.ஆர். வழியில் தொண்டர்களை நம்பும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

Update: 2023-05-20 06:45 GMT

எம்.ஜி.ஆர். வழியில் தொண்டர்களை நம்பும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

செயல்வீரர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், இணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தொண்டர்களின் மகத்தான ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சியை பிடித்தார். கடந்த 1977-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., 121 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை பிடித்தது. அப்போது ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சிக்கு வித்திட்டது.

மக்கள் ஆதரவு

அதேபோல் திருச்சியில் நடத்திய மாநாட்டை போல் அடுத்து நடைபெற உள்ள கொங்கு பகுதி மாநாட்டில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓ.பன்னீர்செல்வத்திற்கு வலு சேர்க்க வேண்டும். எம்.ஜி.ஆர். வழியில் தொண்டர்களை நம்பும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகர், மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., பிரபாகர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

மக்கள் உள்ளனர்

சசிகலா, தினகரன் முதல் அன்வர்ராஜா வரை எடப்பாடி பழனிசாமி அணியின் வேலுமணி, கே.பி.முனுசாமி உள்பட அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அ.தி.மு.க.வை என்னை தவிர யாராலும் காப்பாற்ற முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். எங்களை நான்கு பேர் கூட்டணி என்று கிண்டல் செய்தார். ஆனால் திருச்சியில், 3 லட்சம் பேரை கூட்டி மாநாடு நடத்தினோம்.

இந்தியாவே எங்களை திரும்பி பார்க்கிறது. இரட்டை இலை அவர்கள் பக்கம் சென்றாலும் மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் மைனஸ் என்று கூறுகிறார்கள். ஆனால் மைனசும் மைனசும் சேர்ந்தால் தான் பிளஸ் என்பதை நிரூபிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அப்போது மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் உள்பட ஓ.பன்னீர்செல்வம் அணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்