வெள்ளைக்கல் மலை கிராமத்தில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம்
ஊசூரை அடுத்த வெள்ளைக்கல் மலைகிராமத்தில் குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டு, தண்ணீரை பிடித்து சென்றனர்.
குடிநீர் வினியோகம்
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளைக்கல்மலை, நச்சிமேடு, பள்ளகொல்லை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மலை கிராமங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்.
பள்ளக்கொல்லை மலை கிராமத்தில் சுமார் 8 ஆண்டு காலமாக குடிதண்ணீர் குழாய் அமைத்து தரும்படி கேட்டு வந்தனர். கலெக்டர் உத்தரவின்பேரில் 15-வது மானியக் குழு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பணி முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முதல் குடிநீர் வழங்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, வார்டு உறுப்பினர் பூங்கொடி சேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பூஜை செய்தனர்
பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை மலை கிராமத்தினர் கடவுளாக பாவித்து, குடிநீர் குழாய்க்கு மஞ்சள், குங்குமிட்டு, பூ, பழம், வெற்றிலைப்பாக்கு, தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை படையலிட்டு தீபாராதனை காட்டி தரையில் விழுந்து கும்பிட்டு வழிபாடு நடத்தினர்.
பின்னர் பெண்கள் மகிழ்ச்சியடன் தண்ணீரை குடங்களில் பிடித்து சென்றனர்.