'சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை தான்' ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
‘ஜெயிலர்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் பேசிய ரஜினிகாந்த், ‘சூப்பர் ஸ்டார் பட்டம் எப்போதுமே தொல்லை தான்’ என்று குறிப்பிட்டார்.
சென்னை,
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் உள்பட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
'ஜெயிலர்' படத்தின் பாடல்கள் வெளியீடு விழா சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடந்தது. விழாவுக்கு வந்த ரஜினிகாந்தை ரசிகர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.
விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
'ஜெயிலர்' படத்தின் கதையை நெல்சன் என்னிடம் சொல்லும் போது உடனடியாக பிடித்தது. எனவே ஓகே செய்தேன். படம் அற்புதமாக வந்திருக்கிறது. இந்த படம் 'பாட்ஷா' மாதிரி இருக்குமானு தெரியல, ஆனா அதுக்கெலாம் மேல இருக்கும். நீங்க தான் பாத்துட்டு சொல்லணும்.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இந்த இயக்குனரை மாற்றி விடுங்கள் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் எதையும் படக்குழு பொருட்படுத்தவில்லை. அதன் எதிரொலிப்பு தான் படம் நன்றாக வந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம்
என்னை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் டைட்டில் என்னைக்குமே தொல்லைதான். 'ஹூக்கும்...' பாடலில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை மட்டும் நீக்க சொன்னேன். பாடல் அற்புதமாக இருந்தது. காவலா பாடலில் தமன்னா அட்டகாசமாக ஆடியிருப்பார். எனக்கு வேலை கம்மிதான் ஒரே ஒரு ஸ்டெப்போடு முடித்திருப்பேன். அந்த பாடலை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகிறார்கள்.
நெல்சன் நகைச்சுவையாக பேசுவார். ஆனால், டைரக்சன் என்று வந்துவிட்டால் ஹிட்லராக மாறிவிடுவார். என்ன வேண்டுமோ அதை வாங்காமல் விடமாட்டார்.
படத்துல பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. அதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. சீரியஸான சீன்ல எல்லாம் காமெடி பண்ணுவார் நெல்சன். 'காவாலா' சாங்க்ல எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்குனு பில்டப் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. ஆனா, ரெண்டே ஸ்டெப் கொடுத்துட்டு போதும்னு சொல்லிட்டாங்க.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமன்னா, அனிருத், ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயணன், மனைவி லதா, மகள் சவுந்தர்யா, நடிகர் நாசர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.